ரத்தக்கறைகளுடன் ஆடைகள் மீட்பு: வழிப்பறி கொள்ளையர்களால் மீன் வியாபாரி கடத்தி கொலையா? போலீசார் விசாரணை


ரத்தக்கறைகளுடன் ஆடைகள் மீட்பு: வழிப்பறி கொள்ளையர்களால் மீன் வியாபாரி கடத்தி கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 March 2019 4:15 AM IST (Updated: 4 March 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மீன் வியாபாரியின் ஆடைகள் ரத்த கறையுடன் மீட்கப்பட்டன. அவரை வழிப்பறி கொள்ளையர்கள் கடத்தி கொலை செய்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் வி.தட்டாஞ்சாவடியில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 45), மீன் வியாபாரி. இவர் தினமும் அதிகாலையில் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகம், பெரியமார்க்கெட் உள்ளிட்ட மீன் விற்பனை செய்யும் இடங்களுக்கு சென்று, மொத்தமாக மீன்களை வாங்கி புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் வைத்து மீன் வியாபாரம் செய்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு கணேசன் தனது வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டு தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றார். அங்கு அவர் எதிர்பார்த்த மீன் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே அவர் அங்கு மீன் வாங்காமல் பெரிய மார்க்கெட் புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் அங்கு சென்று சேரவில்லை.

இதற்கிடையே உப்பளத்தில் இருந்து தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் வழியில் நேற்று காலை 6 மணியளவில் ஒரு செல்போன் ஒலித்துக்கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் பாலு அதை எடுத்து பேசினார். அது கணேசனின் செல்போன் என்பது தெரியவந்தது. மறுமுனையில் பேசிய நபர் கணேசனின் மனைவி கலா. அவர் மீன் வாங்கி விட்டீர்களா? என்று கேட்டுள்ளார்.

உடனே போலீஸ்காரர் பாலு அவரிடம், நான் கணேசன் இல்லை பாலு. இந்த செல்போன் ரோட்டில் கிடந்து ஒலித்துக்கொண்டு இருந்தது. அதை நான் எடுத்து பேசினேன் என்று கூறினார். பின்னர் பாலு அந்த பகுதியை சுற்றி கணேசனை தேடியுள்ளார். அப்போது அங்குள்ள புதரில் அவரது மொபட் மற்றும் லுங்கி, சட்டை ஆகியவை ரத்தக்கறையுடன் கிடந்தது. மேல் சட்டையில் வைக்கப்பட்டு இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் காகிதங்கள் சிதறி கிடந்தன. ஆனால் கணேசனை காணவில்லை.

உடனே அவர் இது குறித்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கிடந்த சட்டை, லுங்கி மற்றும் மொபட்டை கைப்பற்றினர். பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

அது சிறிது தூரம் ஒடி அந்த பகுதியில் உள்ள ஒரு இரும்பு குடோனுக்குள் சென்று திரும்பியது. வெளியே வந்த மோப்பநாய் அங்கு நின்று கொண்டு இருந்த லாரியின் அருகில் சென்று படுத்துக்கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. எனவே கணேசனை பற்றிய தகவல்களை போலீசாரால் சேகரிக்க முடியவில்லை.

கணேசன் தினமும் மீன் வாங்க வரும்போது ரூ.25 ஆயிரம் வரை எடுத்துச் செல்வது வழக்கம். எனவே வழிப்பறி கொள்ளையர்கள் யாரேனும் அவரை கண்காணித்து கடத்தி கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அமைச்சர் நமச்சிவாயம் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டார். அப்போது போலீசாரிடம் கணேசனை விரைவில் கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story