பெங்களூருவில் 31-ந் தேதி நடக்கிறது: ராகுல் காந்தி, தேவேகவுடா பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் - சித்தராமையா தகவல்


பெங்களூருவில் 31-ந் தேதி நடக்கிறது: ராகுல் காந்தி, தேவேகவுடா பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் - சித்தராமையா தகவல்
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 8:58 PM GMT)

ராகுல் காந்தி மற்றும் தேவேகவுடா பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பெங்களூருவில் வருகிற 31-ந் தேதி நடக்க உள்ளதாக சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தினோம்.

இது ஒன்றும் புதியது இல்லை. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்ததும், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட்டு வருகிறோம். கர்நாடகத்தில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இணைந்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களின் குறிக்கோள். 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். அதற்கான பணிகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

இதற்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. சிவமொக்கா தொகுதியில் மட்டுமே குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினோம். காங்கிரஸ் இல்லாத கர்நாடகத்தை உருவாக்குவதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். இது சாத்தியம் இல்லை.

நாங்கள் தொகுதி பங்கீடு உடன்பாடு செய்துள்ளோம். இன்னும் 2 நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பரஸ்பரம் கூட்டணி கட்சியின் வெற்றிக்கு பாடுபடுவார்கள். இந்த விஷயத்தில் நாங்கள் தொண்டர்களுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம்.

வருகிற 31-ந் தேதி காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி தேர்தல் பிரசார ெபாதுக்கூட்டம் பெங்களூருவில் நடக்கவுள்ளது. இதில் ராகுல் காந்தி, தேவேகவுடா கலந்து கொள்வார்கள். இந்த தகவல், மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் மூலம் ராகுல் காந்திக்கு தெரிவிக்கப்படுகிறது. அவர் இதற்கு ஒப்புக்கொள்வார் என்று கருதுகிறேன்.

அரசியலமைப்பு சட்டம், இந்த தேசத்தின் நலன் கருதி, பா.ஜனதா தோற்கடிக்கப்பட வேண்டும். இந்த பணியில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இணைந்து பணியாற்றுகின்றன. இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story