கொடுமுடி அருகே அரசியல் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்

கொடுமுடி அருகே அரசியல் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் கள்ளக்காதலி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கொடுமுடி,
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வாழநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 45). இவர் கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி இணை செயலாளராக இருந்துள்ளார். மனைவியை பிரிந்த சிவக்குமார் வாழநாயக்கன்பாளையத்தில் தனியாக வசித்து வந்தார். சிவக்குமார் வடக்குபுதுப்பாளையம் சுடுகாடு நுழைவுவாயில் முன்பு தலையில் வெட்டு காயத்துடன் கிடந்தார். நேற்று முன்தினம் அதிகாலை அந்த வழியாக சென்ற வெங்கம்பூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்தார்.
இதுபற்றி அறிந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் சிவக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததது. இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் (கொடுமுடி), சப்–இன்ஸ்பெக்டர்கள் குமரேஷ் (சிவகிரி), ராம்பிரபு (பெருந்துறை) மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் கொடுமுடி ஒத்தக்கடை ரோட்டில் நேற்று காலை வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக ஒரு பெண்ணும், ஆணும் மோட்டார்சைக்கிளில் வந்தனர். சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் வெங்கம்பூர் அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி செல்வி (29), தாமரைப்பாளையம் அருகே உள்ள கொந்தளத்தை சேர்ந்த சின்னுசாமி (38) என்பதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், செல்வி, சின்னுசாமி, குள்ளகவுண்டன்புதூரை சேர்ந்த ராஜு (38) ஆகியோரின் உதவியுடன் சிவக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. செல்வியும், சின்னுசாமியும் கொடுத்த தகவலின் பேரில் ராஜுவும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட செல்வி போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–
கொலை செய்யப்பட்ட சிவக்குமார் எனது கணவர் செந்தில்குமாரின் நண்பர் ஆவார். அதன் மூலம் எனக்கும் சிவக்குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சிவக்குமார், ‘நீ என்னிடம் மட்டும்தான் உல்லாசமாக இருக்க வேண்டும். வேறு யாரிடமும் இருக்கக்கூடாது’ என்று என்னிடம் கூறினார். மீறினால் உன் மகள்களை கடத்துவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் நான் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதைத்தொடர்ந்து நான் வேலை பார்க்கும் எழுமாத்தூர் மில்லில் காவலாளியான ராஜு மற்றும் அவருடைய நண்பர் சின்னுசாமியின் உதவியை நாடினேன்.
இந்த நிலையில் நான் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வடக்கு புதுப்பாளையம் பஸ் நிறுத்தத்துக்கு சென்றேன். அப்போது அங்கு சிவக்குமார் மோட்டார்சைக்கிளோடு எனக்காக காத்துக்கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து அவரை நான் மோட்டார்சைக்கிளில் வைத்துக்கொண்டு உல்லாசம் அனுபவிக்க மறைவான இடத்துக்கு செல்லலாம் என்று கூறி அழைத்து சென்றேன்.
வடக்கு புதுப்பாளையம் சுடுகாடு அருகே சென்றதும் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு, நான் இயற்கை உபாதையை கழித்து வருகிறேன் என்று கூறி விட்டு அங்கிருந்து நழுவினேன். அதன்பின்னர் அந்த பகுதியில் உள்ள மறைவான இடத்தில் ஏற்கனவே பதுங்கியிருந்த ராஜுவும், சின்னுசாமியும் அங்கு வந்தனர். அவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். பின்னர் 3 பேரும் சேர்ந்து இரும்பு குழாயால் சிவக்குமாரை தாக்கினோம். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பித்துச்சென்றோம். இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.






