ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலர் கைது
ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு,
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). எலக்ட்ரீசியன். இவருக்கு சொந்தமான காலி இடம் அந்த பகுதியில் உள்ளது. இந்த இடத்துக்கான வரியை செலுத்துவதற்காக குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு சூரியம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு, வரி வசூலராக (பில் கலெக்டர்) பணியாற்றி வந்த சூரியம்பாளையம் ஜவுளிநகரை சேர்ந்த மாணிக்கம் (50) என்பவர் வரி செலுத்தும் ரசீது வழங்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று குமாரிடம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார் இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை குமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை குமார் மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு சென்றார். அங்கு வரி வசூலர் மாணிக்கத்திடம் குமார் ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மாணிக்கத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.