கொலை வழக்கில் சிக்கிய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கொலை வழக்கில் சிக்கிய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 15 Dec 2019 3:45 AM IST (Updated: 14 Dec 2019 10:14 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் கொலை வழக்கில் சிக்கிய 5 பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கம்பம், 

கம்பம் சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் சிவகுருநாதன் (வயது 28). இவர் மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

சமீபத்தில் திருட்டு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் சிவகுருநாதன் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 14-ந்தேதி சிவகுருநாதன் கொலை செய்யப்பட்டு, உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் முல்லைப் பெரியாற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சிவகுருநாதனை அவரது நண்பர்களே சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகள் 8 பேரை போலீசார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களில் மணிகண்டன் (31), ஆசை (25), கணேசன் (39), பிரவீன்குமார் (26), விக்னேஷ்வரன் (26) ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து மணிகண்டன் உள்பட 5 பேரையும் கம்பம் தெற்கு போலீசார் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Next Story