நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 397 பேருக்கு கொரோனா: தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று ஒரே நாளில் 397 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டனர். இதில் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் கடந்த 2 வாரங்களாக வேகம் எடுத்து வந்தது. இந்த நிலையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 181 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, புதிய உச்சத்தை தொட்டது. இதில் நெல்லை மாநகர பகுதியில் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி பல்வேறு தெருக்களில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டு விட்டன.
நெல்லை மாவட்டத்தில் இதுவரை 1,114 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று 181 பேருடன் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,295 ஆக உயர்ந்து உள்ளது. 695 பேர் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெல்லை மாநகரில் மட்டும் ஒரே நாளில் 54 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் தெருவில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அந்த தெரு தடுப்புகளால் அடைக்கப்பட்டு உள்ளது. ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் 3 போலீசாருக்கு கொரோனா வந்துள்ளது. அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தினமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த சுகாதார செவிலியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஏற்கனவே 9 பேர் இறந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியானார். நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த தடியன்புதூரை சேர்ந்த 50 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
அவரது உடலை நள்ளிரவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆம்புலன்ஸ் மூலம் சிந்துபூந்துறை எரிவாயு தகனமேடைக்கு கொண்டு சென்று தகனம் செய்தனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 240 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 21 பேருக்கும், தனியார் ஸ்கேன் மைய பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதவிர நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 637 பரிசோதனை செய்ததில் 35-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 530 ஆக உயர்ந்து உள்ளது.
நேற்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரி, நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 256 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதி 272 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசி மாவட்டத்தில் ஒருவர் மட்டும் கொரோனா பாதிப்பால் ஏற்கனவே இறந்து விட்டார். இந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.
ஆலங்குளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 65 முதியவர் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் இறந்தார். இதனால் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதில் ஏற்கனவே 9 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து உள்ளனர். இதில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அந்த மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த 50 வயது பெண் கடந்த 1-ந் தேதி கொரோனா பாதிப்புடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பலத்த பாதுகாப்புடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் தூத்துக்குடி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த பகுதியில் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் கோவில்பட்டியில் 70 பேருக்கும், விளாத்திகுளத்தில் 44 பேருக்கும், தூத்துக்குடி மாநகரம் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,416 ஆக அதிகரித்து உள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,241 ஆக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story