காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா பரிசோதனை
காஞ்சீபுரத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வாக்கு எண்ணும் பணி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சீபுரம் என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்து முடிந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் காஞ்சீபுரம் பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணி வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 706 அரசு ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
கொரோனா பரிசோதனைவாக்குகளை எண்ணுவதற்காக மையத்துக்குள் செல்லும் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று கொரோனா பரிசோதனையும், தடுப்பூசி போடும் பணியும் நடந்தது.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட மையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் அருண்மொழி தலைமையில் மருத்துவர்கள் காமாட்சி, ராகவி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். போலீசார் உள்பட அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதே மையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடந்தது.
காஞ்சீபுரம் செவிலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் போது உடனிருக்க கூடிய கட்சி பிரமுகர்களுக்காக கொரோனா பரிசோதனையும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்றது.