இமாசல பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் பேருக்கு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம் - காங்கிரஸ்


இமாசல பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் பேருக்கு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம் - காங்கிரஸ்
x

இமாசல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் தரப்படும் என்று கவர்ச்சிகரமான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதி

பா.ஜ.க. ஆட்சி நடக்கிற இமாசலபிரதேச மாநிலத்தில், 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு வரும் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க. போராடுகிறது.

அதே நேரத்தில் 2017-ம் ஆண்டு இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் கட்சியும் வரிந்து கட்டுகிறது.

1 லட்சம் பேருக்கு வேலை

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலுக்கு கவர்ச்சிகரமான அம்சங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுக்விந்தர் சிங் சுக்கு உள்ளிட்டோர் முன்னிலையில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் என அளிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:-

* 1 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். எனவே 1 லட்சம் பேருக்கு வேலை அளிக்கப்படும்.

* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.

* வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் வழங்கப்படும்.

பெண்களுக்கு உதவித்தொகை

* 18-60 வயது பிரிவு பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும்.

* 'ஸ்டார்ட் அப்' என்னும் புத்தொழில் நிறுவனங்களை தொடங்க தொகுதிக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.

* பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் கொண்டு வரப்படும்.

* மாநிலத்தின் கடன் சுமை குறைக்கப்படும்.

* துப்பாக்கி லைசென்ஸ் கட்டணம் குறைக்கப்படும்.

* வாடகைக்கார் டிரைவர்களுக்கு குறைந்த வட்டிவிகிதத்தில் கடன் வழங்கப்படும். ஆட்டோ பெர்மிட் காலம் 10 ஆண்டுகள் என்பது 15 ஆண்டுகளாக உயர்த்தப்படும்.

இவ்வாறு கவர்ச்சிகரமான அம்சங்கள், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டு, தேர்தல் அறிக்கை குழு தலைவர் தானி ராம் சாண்டில் கூறுகையில், " இது வெறும் தேர்தல் அறிக்கை அல்ல. இமாசலபிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்குமான ஆவணம் ஆகும்" என தெரிவித்தார்.


Next Story