ரெயிலில் அடிபட்டு 2 பெண்கள் சாவு


ரெயிலில் அடிபட்டு 2 பெண்கள் சாவு
x

மண்டியாவில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு பலியானார்கள்.

மண்டியா:

மண்டியாவில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு பலியானார்கள்.

2 பெண்கள் உடல் மீட்பு

மண்டியா (மாவட்டம்) டவுன் பேட்டைவீதி அருகேயுள்ள சிட்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று காலை மூதாட்டி மற்றும் பெண் ஒருவரின் உடல் சிதைந்தபடி கிடந்தன. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் 2 பெண்களின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அதில் ஒரு பெண்ணின் உடல் இரண்டு துண்டாகியிருந்தது. மற்றொரு பெண்ணின் தலை முழுவதும் நசுங்கியதால் அடையாளம் காண முடியாதபடித நிலையில் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் கிடந்த சில ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ரெயில் போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.

அடையாளம் தெரிந்தது

முதலில் பலியான 2 பெண்கள் பற்றி அடையாளம் தெரியவில்லை. போலீசாரின் தீவிர விசாரணையில் இறந்தவர்கள் பற்றி அடையாளம் தெரியவந்தது. அதாவது இறந்தவர்களில் ஒருவர் ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா சக்ரபாவி கிராமத்தை சேர்ந்த லட்சுமம்மா (வயது 45), பெங்களூரு காமாட்சிபாளையம் காவேரிபுராவை சேர்ந்த சி.டி.ரவி என்பவரின் மனைவி சசிகலா (35) என்று தெரியவந்தது.

இவர்களில் லட்சுமம்மா ஜவடனகொப்பலு பகுதியில் அடகு கடையில் அடகுவைத்திருந்த நகைகளை மீட்டு செல்வற்காக வந்துள்ளார். சசிகலா தனது சொந்த ஊரான ஜவடனகொப்பலு கிராமத்திற்கு செல்ல வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் இருந்து காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து மண்டியா ரெயில் நிலையத்தில் இறங்கி, நடந்து சென்றனர். அப்போது அவர்கள் ரெயில் நிலையம் அருகேயிருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் 2 பேரும் செல்போனில் பேசியப்படி சென்று கொண்டிருந்தனர்.

ரெயில் மோதி சாவு

இந்நிலையில் அந்த வழியாக மைசூருவில் இருந்து மண்டியாவிற்கு மால்குடி எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இதனை 2 பேரும் கவனிக்கவில்லை. மேலும் ரெயில் நிலையத்தில் இருந்தவர்களும் 2 பேரையும் அழைத்து விலகி செல்லும்படி கூறினர். ஆனால் அது அவர்களுக்கு கேட்கவில்லை. இந்நிலையில் அதிவேகத்தில் வந்த ரெயில் 2 பேர் மீதும் மோதியது.

இதில் ரெயிலில் அடிப்பட்டு 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தது தெரியவந்தது. இறந்த 2 பேரின் உடல்களையும் ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக மண்டியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மண்டியா ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story