குட்கா ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு தடைகோரிய மனு தள்ளுபடி

தமிழ்நாட்டில் குட்கா ஊழல் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்கு தடைகோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.
புதுடெல்லி,
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு கடந்த ஏப்ரல் 26–ந் தேதி குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அதிரடி உத்தரவிட்டது.
சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தமிழக அரசு சுகாதாரத்துறை அதிகாரி இ.சிவகுமார், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், மனுதாரரை விசாரிக்காமலேயே இந்த உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி உயர்வுக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சு, குட்கா விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்வதால் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் தற்போதைய தீர்ப்பு டிவிஷன் பெஞ்சு பிறப்பித்த தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது. எனவே, சி.பி.ஐ. விசாரணையை அனுமதித்து சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கியும் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோரும் ஆஜராகி வாதாடினார்கள்.இந்த வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
குட்காவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களின் மனங்களில் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வழக்கின் மீதான விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பது என்று ஐகோர்ட்டு முன்வந்துள்ளது. ஐகோர்ட்டின் முடிவு முற்றிலும் சரியானதே. இந்த பிரச்சினையில் உள்ள அனைத்து அம்சங்களையும் ஐகோர்ட்டு முழுமையாக கருத்தில் கொண்டு, இந்த குற்றத்தின் மீது நியாயமான விசாரணையை மேற்கொள்ளும் வகையில் சி.பி.ஐ.க்கு மாற்றியிருக்கிறது என்ற மூத்த வக்கீல் பி.வில்சன் வாதம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.தன்னை விசாரிக்கவில்லை என்று மனுதாரர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. முதல் குற்றப்பத்திரிகையில் பெயர் குறிப்பிட்டுள்ளதோ இல்லையோ குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு அழைக்கப்படுவதை தனக்கான உரிமை என்று மனுதாரர் கோர முடியாது என்ற வாதமும் ஏற்கப்படுகிறது. ஒரு குற்றவாளி தன்னை யார் விசாரிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாது. எனவே ஐகோர்ட்டின் தீர்ப்பு எந்த வகையிலும் தவறானது என்று கூறமுடியாது.
இதேபோன்ற மற்றொரு வழக்கில் ஒரு டிவிஷன் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை என்று கூறியதால் அதே குற்றத்துக்கு மற்றொரு பெஞ்சு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று கூறத்தேவையில்லை. இது மற்றொரு டிவிஷன் பெஞ்சின் முடிவை அவமதிப்பது என்றோ, ஏற்கவில்லை என்றோ கூறமுடியாது.எனவே, சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு செல்லுபடியாகும். சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.