22-ந் தேதி டெல்லியில் நடைபெறுவதாக இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் தள்ளிவைப்பு - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு


22-ந் தேதி டெல்லியில் நடைபெறுவதாக இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் தள்ளிவைப்பு - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2018 11:00 PM GMT (Updated: 19 Nov 2018 8:10 PM GMT)

டெல்லியில் வருகிற 22-ந் தேதி நடைபெறுவதாக இருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

கொல்கத்தா,

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இது தொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை அண்மையில் சந்தித்து பேசினார்.

இதேபோல் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

இதையடுத்து டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சிகளும் வருகிற 22-ந் தேதி சந்தித்து இதுபற்றி விரிவான பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு, நேற்று கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்தது.

அப்போது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக அவர்கள் வியூகம் வகுத்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர், சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி ஆகியவற்றை மத்திய அரசு தவறாக வழி நடத்தி வருகிறது. இதனால் இந்த அமைப்புகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. பா.ஜனதா அரசின் செயல்பாடு அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்பதாக உள்ளது. எனவே நாட்டின் நலனையும், ஜனநாயகத்தையும் காக்க எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பா.ஜனதாவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் டெல்லியில் வருகிற 22-ந் தேதி கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. எனினும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் இதில் இணைக்கும் விதமாக தற்போது இந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.


Next Story