சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நியமனத்துக்கு எதிரான மனு - வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி விலகல்


சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நியமனத்துக்கு எதிரான மனு - வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி விலகல்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:30 PM GMT (Updated: 21 Jan 2019 9:32 PM GMT)

சி.பி.ஐ. இயக்குனராக எம்.நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதற்கு எதிரான பொதுநல வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார்.

புதுடெல்லி,

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

இதை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக் வர்மா மீண்டும் இயக்குனர் பதவியை தொடரலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தது. மேலும் அலோக் வர்மா குறித்த இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான உயர்நிலை குழு எடுக்கும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து, சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பதவி ஏற்ற 2 நாட்களில், அவரை பதவி நீக்கம் செய்வதாக பிரதமர் தலைமையிலான உயர்நிலை குழு அறிவித்தது.

அத்துடன் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவ் கடந்த 11-ந் தேதி மீண்டும் பொறுப்பு ஏற்றார். இதற்கிடையே, தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமிக்கப்பட்ட அலோக் வர்மா, அந்த புதிய பதவியை ஏற்க மறுத்து பணியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனரான எம்.நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பின் சார்பில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், டெல்லி சிறப்பு காவல் துறை சட்டத்தின்படி நிரந்தர சி.பி.ஐ. இயக்குனரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், நாகேஸ்வரராவை இடைக் கால இயக்குனராக நியமித்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே தன்னுடைய வாதத்தை தொடங்கியதும் இடையில் குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 24-ந் தேதி கூடி சி.பி.ஐ. இயக்குனர் நியமனத்தை முடிவு செய்ய இருக்கும் பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழுவில் தானும் இடம்பெற்று இருப்பதால், இந்த வழக்கின் விசாரணையில் இருந்து தான் விலகிக்கொள்வதாக தெரிவித்தார்.

வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) இரண்டாவது மூத்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்றும் அப்போது அவர் அறிவித்தார்.


Next Story