இரட்டை குடியுரிமை பிரச்சினை: ராகுல் காந்தியின் 2 வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வருகிறது


இரட்டை குடியுரிமை பிரச்சினை: ராகுல் காந்தியின் 2 வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வருகிறது
x
தினத்தந்தி 3 May 2019 5:15 AM IST (Updated: 3 May 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வைத்திருக்கிறார் என அமேதி சுயேட்சை வேட்பாளரான துருவ் லால் என்பவரின் புகாரை நிராகரித்த தேர்தல் கமி‌ஷன் ராகுல் காந்தியின் வேட்பு மனுக்களை அமேதி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் ஏற்றுக் கொண்டது.

புதுடெல்லி,

பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி இதே விவகாரம் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் உள்துறை அமைச்சகம் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதற்கிடையே இரு தனி நபர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் ‘இங்கிலாந்து நாட்டில் நிறுவனங்களுக்கான பதிவாளர் அலுவலகத்தில் பேக்காப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களில் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளதாக’ கூறப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி இந்திய குடிமகனாக இல்லாத நிலையில் அமேதியிலும் வயநாட்டிலும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார். எனவே கோர்ட்டு தலையிட்டு ராகுல் காந்தியின் அமேதி மற்றும் வயநாட்டில் தாக்கல் செய்த 2 வேட்பு மனுக்களை நிராகரிக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிட வேண்டும். அவருடைய குடியுரிமை தொடர்பாக முடிவு எடுக்கும் வரை வாக்காளர் பட்டியலில் இருந்து அவருடைய பெயரை நீக்க வேண்டும்.

இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க கோரி மனுதாரர் தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் அமர்வில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2015–ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் தொடுத்த இதே போன்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story