டெல்லியில் சோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை


டெல்லியில் சோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
x
தினத்தந்தி 19 May 2019 10:30 PM GMT (Updated: 19 May 2019 10:08 PM GMT)

டெல்லியில் சந்திரபாபு நாயுடு நேற்று சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

ஆந்திர முதல்-மந்திரியும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மத்தியில் பாரதீய ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதிலும், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்கும் முயற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் வருகிற 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி சென்ற சந்திரபாபு நாயுடு அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லோக் தந்திரிக் ஜனதாதள தலைவர் சரத்யாதவ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

முன்னதாக அவர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களான டி.ராஜா, சுதாகர் ரெட்டி ஆகியோரையும் சந்தித்தார்.

பின்னர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சென்ற சந்திரபாபு நாயுடு அங்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, டெல்லியில் 23-ந் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி கூட்டி இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அவர்களுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.

அதன்பிறகு டெல்லி திரும்பிய சந்திரபாபு நாயுடு நேற்று ராகுல் காந்தி, சரத்பவார், சீதாராம் யெச்சூரி ஆகியோரை மீண்டும் சந்தித்து பேசினார்.

அதன்பிறகு அவர் சோனியா காந்தியை சந்தித்து அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே, தேர்தல் கமிஷனுக்கு சந்திரபாபு நாயுடு நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில், பிரதமர் மோடி கேதார்நாத், பத்ரிநாத்துக்கு தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட பயணத்தை தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பியது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது என்றும், இதை தேர்தல் கமிஷன் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.


Next Story