தேர்தல் பத்திரங்கள் வெளியிட ரிசர்வ் வங்கி ஆட்சேபனையா? - மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் விளக்கம்


தேர்தல் பத்திரங்கள் வெளியிட ரிசர்வ் வங்கி ஆட்சேபனையா? - மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
x
தினத்தந்தி 10 Dec 2019 11:15 PM GMT (Updated: 10 Dec 2019 9:46 PM GMT)

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வெளியிட ரிசர்வ் வங்கி ஆட்சேபனை தெரிவித்ததா என்பதற்கு மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

புதுடெல்லி,

தேர்தல் நன்கொடை

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சர்ச்சை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. பாரத ஸ்டேட் வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வெளியிட ரிசர்வ் வங்கி ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுவது குறித்து கேட்கப்பட்டது. அவற்றுக்கு பதில் அளித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வெளியிடுவது தொடர்பான ஆலோசனை கூட்டங்களில் ரிசர்வ் வங்கி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எந்த வங்கி சார்பில் வெளியிடப்படுகிறது என்று கேள்வி எழுப்பினர். அந்த ஆலோசனை பதிவு செய்யப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கி வெளியிடுவது என்று முடிவான பிறகு, ரிசர்வ் வங்கி எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. நன்கொடை அளிப்பதில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கவே பத்திரங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டது. நன்கொடை அளித்தவர் யார் என்று மத்திய அரசு கூட தெரிந்து கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

“தண்ணீர், பொது பட்டியலுக்கு மாற்றப்படாது”

மாநில பட்டியலில் இருக்கும் தண்ணீரை பொது பட்டியலுக்கு மாற்றும் யோசனை, இப்போதைக்கு இல்லை என்று மத்திய ஜலசக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத் மாநிலங்களவையில் கூறினார்.

தண்ணீர், தொடர்ந்து மாநில பட்டியலிலேயே இருக்க வேண்டும் என்றும், மாநிலங்களுக்கிடையே நதிநீர் பிரச்சினை எழுந்தால், மத்திய அரசு தலையிடலாம் என்றும் திரும்ப திரும்ப கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“அசாமில் 1¼ லட்சம் பேர் வெளிநாட்டினர்”


அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து பெயர் விடுபட்ட 19 லட்சம் பேர், அம்மாநிலத்தில் உள்ள வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களில் முறையிடலாம் என்று அறிவிக்கப்பட்டது. அப்படி முறையிட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர் வெளிநாட்டினர் என்று தீர்ப்பாயங்கள் தீர்ப்பு அளித்துள்ளன. ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 225 பேர் இந்திய குடிமக்கள் என்று தீர்ப்பு அளித்துள்ளன.

இந்த தகவலை மக்களவையில் கேள்வி நேரத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் தெரிவித்தார்.

‘பானிபட்’ படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை

‘பானிபட்’ என்ற புதிய இந்தி படத்தில், மகாராஜா சூரஜ்மால் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மக்களவையில் ராஜஸ்தானை சேர்ந்த ராஷ்டிரீய லோக்தந்திரிக் கட்சி உறுப்பினர் ஹனுமன் பேனிவால், பா.ஜனதா உறுப்பினர் சுமேதானந்த் சரஸ்வதி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த காட்சிகளால், ராஜஸ்தான், அரியானா மாநில மக்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

“ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 65 லட்சம் பேர் பலன் அடைந்தனர்”

குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு அளிக்கும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை டெல்லி, மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஒடிசா ஆகிய 4 மாநிலங்கள் அமல்படுத்தவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் மாநிலங்களவையில் கூறினார்.

இந்த திட்டத்தில் கடந்த ஓராண்டில், 65 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலன் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் வெளிநடப்பு

மாநிலங்களவையில் நேற்று மேற்கு வங்காள கவர்னர் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்ப முயன்றனர். சபையின் மையப்பகுதிக்கு வந்த அவர்களுக்கு சபைத்தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி அளிக்கவில்லை. அதையடுத்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பணமதிப்பு நீக்கத்தின் பயன்கள்

பணமதிப்பு நீக்கத்தால் கருப்பு பணம் வெளியே கொண்டுவரப்பட்டதாகவும், பயங்கரவாதத்துக்கான நிதி உதவி துண்டிக்கப்பட்டதாகவும் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் மாநிலங்களவையில் கூறினார்.


Next Story