உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: வீடியோவை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணைக்கு தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: வீடியோவை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணைக்கு தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Jan 2020 10:01 PM GMT (Updated: 10 Jan 2020 10:01 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ நகலை தாக்கல் செய்யுமாறு மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த ஆணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், எனவே வாக்கு எண்ணிக்கையையும், வாக்கு எண்ணும் மையங்களின் வளாகம் முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் கடந்த மாதம் 30-ந் தேதி வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ நகலை ஐகோர்ட்டு பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, வக்கீல்கள் எம்.பி.பார்த்திபன், பா.வினோத் கண்ணா ஆகியோரும், தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சனும் ஆஜராகி வாதாடினர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ நகலை பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தனர்.

மேலும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனு மீது பதில் மனு தாக்கல் செய்யுமாறு மதுரை ஐகோர்ட்டு பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

இதே அமர்வில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்களை நடத்த உத்தரவிடுமாறு சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை பின்னர் விசாரிப்பதாக கூறிய தலைமை நீதிபதி, இந்த மனு மீது பதில் மனு தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.


Next Story