பயிர்க்கடன் தள்ளுபடி வழக்கு: தமிழக அரசு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


பயிர்க்கடன் தள்ளுபடி வழக்கு: தமிழக அரசு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Jan 2020 3:43 AM IST (Updated: 18 Jan 2020 3:43 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்வது தொடர்பான வழக்கில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி வெளியிட்ட அரசாணையில், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி சலுகை வழங்கும் வகையில் அரசாணையை மாற்றி அமைக்கவேண்டும் என்றும், இதற்கான உத்தரவை 3 மாதங்களுக்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து 2017-ம் ஆண்டு ஜூலை 3-ந் தேதி உத்தரவிட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.நட்ராஜ், தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கண்ணா ஆகியோர் ஆஜரானார்கள். அய்யாக்கண்ணு தரப்பில் வக்கீல்கள் எஸ்.முத்துகிருஷ்ணன், மனோஜ் செல்வராஜ் ஆகியோர் ஆஜரானார்கள்.

அய்யாக்கண்ணு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதாடுகையில், விவசாயிகள் கடனை உடனடியாக கட்ட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருப்பதாகவும், எனவே இந்த வழக்கு விசாரணை முடியும் வரை அவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு நீதிபதிகள், கடன் தொகையை ரத்து செய்வதால் தமிழக அரசுக்கு ஏற்கனவே ரூ.2,000 கோடி செலவு ஏற்படுவதாகவும், எனவே இந்த கடன் சுமையை அதிகரிக்க முடியாது என்பதால், உங்கள் கோரிக்கையை ஏற்க இயலாது என்றும் கூறினார்கள்.

அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக எழுத்துபூர்வமான வாதங்களையும் கூடுதல் ஆவணங்களையும் வருகிற 24-ந் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.

1 More update

Next Story