மத்தியப் பிரதேசத்தில் அரசியல் நெருக்கடி; 92 எம்.எல்.ஏக்களை ராஜஸ்தான் அழைத்துச்சென்றது காங்கிரஸ்

ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் ராஜினாமாவால் மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
போபால்,
மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியில் கடந்த சில நாட்களாகக் குழப்பம் நிலவி வந்தது. மூத்த தலைவரான கமல்நாத் முதல்-மந்திரி பதவியையும், மாநில கட்சித் தலைவர் பதவியையும் வகித்து வருகிறார். அவரிடம் இருந்து கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்ற இளம் தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா முயற்சித்தாலும், மேலிடம் அசைந்து கொடுக்கவில்லை.
இதனால், அதிருப்தியில் இருந்து வந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, நேற்று முன் தினம் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 17 பேருடன் மாயமானதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதனால் கமல்நாத் அரசுக்கு ஆபத்து உருவானது. இதையடுத்து நேற்று ஒரு திடீர் திருப்பமாக ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். இதனால், மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. காங்கிரசில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியானது. மேலும் சில எம்.எல்.ஏ.க்களிடம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனால் மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கு பா.ஜ.க.- காங்கிரஸ் இரு தரப்பினரும் கடுமையான குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை பா.ஜ.க., காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் 107 பேரின் சந்திப்பு நேற்று மாலை போபாலில் நடைபெற்றது. அந்த கூட்டம் முடிந்ததும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 5 சொகுசு பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். அந்த பேருந்து டெல்லி நோக்கிச் சென்றது. நள்ளிரவில் அந்த 5 பேருந்துகளும் டெல்லி புறநகர் பகுதியான அரியானாவின் குர்கான் நகருக்கு சென்று அடைந்தது. அங்குள்ள ஐ.டி.சி. நட்சத்திர ஓட்டலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 101 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 92 பேர் நேற்று போபாலில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அவர்கள் கமல்நாத்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக எழுதி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஜெய்ப்பூரில் அவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story