இந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்து அபிநந்தன் விடுவிப்பு: இப்போதாவது ராகுல்காந்தி நம்புவாரா? - ஜே.பி.நட்டா கேள்வி
இந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் பாகிஸ்தான் அபிநந்தனை விடுதலை செய்தது. இப்போதாவது ராகுல்காந்தி இதனை நம்புவாரா? என ஜே.பி.நட்டா கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 2019, பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரிலுள்ள புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
அப்போது, பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய இந்திய விமானப் படைவீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி கைது செய்யப்பட்ட அபிநந்தன், இரு நாடுகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் மார்ச் 1-ம் தேதி விடுவிக்கப்பட்டார்.
அபிநந்தன் பிடிபட்ட போது பல பிரச்சார வீடியோக்கள் வெளிவந்தன, அவற்றில் சில பாகிஸ்தான் அதிகாரிகள் அவருக்கு முதலுதவி மற்றும் தேநீர் வழங்குவதை காட்டின. அதுபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாகிஸ்தான் படையினரால் ஐ.ஏ.எஃப் விமானி கொடூரமாக தாக்கப்படுவதைக் காண முடிந்தது.
இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்யாவிட்டால் இந்தியா பாகிஸ்தான் மீது வான் தாக்குதல் தொடுக்கப் போவதாக எச்சரித்தது என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி எம்பி அயாஸ் சித்திக் குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில், “அபிநந்தனை விடுவிப்பது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, அபிநந்தனை ராணுவம் விடுவிக்காவிட்டால், இன்று இரவு 9 மணிக்கே இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்றார். இதைக் கேட்டவுடன் ராணுவத் தளபதி ஜெனரல் பஜ்வாவின் கால்கள் நடுங்கின, முகம் வியர்த்துக் கொட்டியது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் இணைத்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, இப்போதாவது ராகுல்காந்தி இதனை நம்புவாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) எதையும் நம்பமாட்டார். நம்முடைய ராணுவம், நம்முடைய அரசு, நம்முடைய மக்களையும் நம்பமாட்டார். இளவரசரின் அதிநம்பிக்கைக்குரிய நாட்டிடம் இருந்து சில விஷயங்கள் வந்துள்ளன. இப்போதாவது இளவரசர் நம்புவாரா?
இந்திய ராணுவத்தின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில்தான் காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்தது. இந்திய ராணுவத்தின் வீரத்தைக் கேள்வி எழுப்பினர். அவர்களின் துணிச்சலைக் கிண்டல் செய்தார்கள். இந்தியாவுக்கு அதிநவீன ரஃபேல் போர் விமானம் கிடைப்பதையும் கிண்டல் செய்தார்தள். ஆனால், இந்திய மக்கள் இதுபோன்ற அரசியலை ஒதுக்கி காங்கிரஸைத் தள்ளிவைத்துவிட்டனர்” என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story