கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி - ப.சிதம்பரம் விமர்சனம்

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய மந்திரிசபையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், முதன்முறையாக மத்திய மந்திரிசபை விரிவாக்கம் இன்று மாலை நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட மந்திரிசபையில் 43 பேர் இடம்பெற்றனர்.
இதற்கு முன்னதாக இன்று காலை முதல் மத்திய மந்திரிகள் சிலர் தங்கள் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அந்த வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலகியிருப்பது, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்திருப்பதையே காட்டுவதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-
“மத்திய அரசில் சுகாதார அமைச்சராகவும் இணை அமைச்சராகவும் இருந்தவர்கள் பதவி விலகியிருக்கிறார்கள் என்பது எதைக் காட்டுகிறது? கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு முழுத் தோல்வியை அடைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை, தடுப்பூசி தட்டுப்பாடு இல்லவே இல்லை என்று இவர்கள் நாள்தோறும் ஏன் பறைசாற்றினார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா?”
இவ்வாறு ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை, தடுப்பூசி தட்டுப்பாடு இல்லவே இல்லை என்று இவர்கள் நாள்தோறும் ஏன் பறைசாற்றினார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா?
— P. Chidambaram (@PChidambaram_IN) July 7, 2021
Related Tags :
Next Story