காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும்..!! - மக்களவையில் அமித்ஷா அறிவிப்பு
தொகுதி மறுவரையறை பணி முடிந்தவுடன் காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று மக்களவையில் அமித்ஷா அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள வடக்கு டெல்லி மாநகராட்சி, தெற்கு டெல்லி மாநகராட்சி, கிழக்கு டெல்லி மாநகராட்சி ஆகிய மூன்றையும் இணைத்து ஒரே மாநகராட்சியாக உருவாக்குவதற்கான டெல்லி மாநகராட்சி திருத்த மசோதா, மக்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் மீது நேற்று விவாதம் நடந்தது. அதில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தாமல், மத்திய அரசு தாமதிப்பதாக குற்றம் சாட்டினர்.
அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதாவது:-
காஷ்மீரை ஜனாதிபதி ஆட்சியிலேயே வைத்திருப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை.
பஞ்சாயத்து தேர்தல் நடத்திவிட்டு, தொகுதி மறுவரையறை பணியை முடித்துவிட்டு, அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படும், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று ஏற்கனவே கூறி இருந்தேன்.
காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல், வன்முறை ஏதுமின்றி நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிந்து விட்டது. தொகுதி மறுவரையறை பணி முடியும் தறுவாயில் இருக்கிறது.
அப்பணி முடிந்தவுடன், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
பின்னர், டெல்லி மாநகராட்சி திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story