கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் - ராகுல் காந்தி நம்பிக்கை


கோப்புப் படம் ANI
x
கோப்புப் படம் ANI
தினத்தந்தி 1 April 2022 6:27 PM IST (Updated: 1 April 2022 6:27 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கர்நாடகா ஒரு இயற்கையான காங்கிரஸ் மாநிலம். கர்நாடகாவில் தான் காங்கிரசின் ஆன்மா உள்ளது. வருகிற சட்டசபை தேர்தலில் குறைந்தது 150 தொகுதிகளிலாவது வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். மேலும் நாம் ஒன்றுபட்டு சரியான பிரச்சினைகளில் மற்றும் தகுதியை அளவுகோலாகக் கொண்டு போராட வேண்டும். 

கட்சித் தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவக்குமார், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிற தலைவர்களுக்கு பெரிய பொறுப்பு உள்ளது. ஒன்றாகப் போராடி 150 இடங்களை வெல்வதுதான் அவர்களின் பொறுப்பு. 

இத்தேர்தலில் போட்டியிட சீட் கொடுப்பதிலும் சரி, கட்சி அமைப்பிலும் சரி, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஏழைகள், சிறு வணிகர்கள் மற்றும் அனைத்துப் பிரிவினருக்காகவும் உழைக்கும் ஆட்சியைக் கொடுக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

பாஜகவினர் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை அழித்து விட்டார்கள். வேலைகளை உருவாக்கும் நிலையில் அவர்கள் இல்லை. 

பிரதமர் மோடி ஊழல் குறித்து பேசுவார், ஆனால் கர்நாடகாவில் இதைப் பற்றி பேசினால், மக்கள் சிரிப்பார்கள். ஏனென்றால் பாஜக ஆட்சி செய்யும் இந்த மாநிலம்  40 சதவீத (கமிஷன்) அரசாங்கத்துடன் கூடிய ஊழல் நிறைந்த மாநிலம் ஆகும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story