மாநில கட்சிகளால் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியாது - ராகுல் காந்தி


மாநில கட்சிகளால் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியாது -  ராகுல் காந்தி
x
தினத்தந்தி 15 May 2022 9:57 PM IST (Updated: 15 May 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

மாநில கட்சிகளுக்கு எந்த சித்தாந்தமும் இல்லை. அக்கட்சிகளால் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியாது என்று ராஜஸ்தான் மாநாட்டில் ராகுல்காந்தி பேசினார்.

மக்களுடன் தொடர்பு அறுந்தது

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்து வந்த காங்கிரஸ் சிந்தனையாளர் அமர்வு மாநாடு முடிவடைந்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நிறைவுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

சாமானிய மக்களுடன் நாம் வைத்திருந்த தொடர்பு அறுந்து விட்டது. அதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அந்த தொடர்பை மறுபடி உருவாக்க வேண்டும். அது நமது கடமை.மக்களிடம் செல்வது, யாத்திரை நடத்துவது என்று நாம் முடிவு செய்துள்ளோம். இதில் எந்த குறுக்குவழியும் இருக்கக்கூடாது. கடின உழைப்பு மூலம் இதை செய்ய வேண்டும். அதற்கான திறமை நமக்கு இருக்கிறது. அதுதான் நமது மரபணு. நாம் மக்களிடம் இருந்து உருவானவர்கள். மீண்டும் மக்களிடமே திரும்பச் செல்வோம்.

இளைஞர்களுடன் தொடர்பு

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்துங்கள். ஒரு நாள், 2 நாள் அல்ல, மாதக்கணக்கில் மக்களுடன் இருக்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

நமது கட்சியில் தகவல் தொடர்பை மேம்படுத்துவது அவசியம். ஒரு துறையில் எதிரிகள் நம்மை மிஞ்சி நிற்கிறார்கள் என்றால், அது தகவல் தொடர்புதான். அவர்களிடம் நம்மை விட அதிக பணம் இருக்கிறது. தகவல் தொடர்பில் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆகவே, நமது தகவல் தொடர்புமுறைகளை சீர்திருத்த வேண்டும். இளைஞர்களுடன் புதிய வழியில் தொடர்பு கொள்ள வேண்டும்.

குடும்பத்துக்கு ஒரு டிக்கெட்

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நான் ஆதரிக்கிறேன். இன்னொருவருக்கு டிக்கெட் வேண்டுமென்றால், அவர் 5 ஆண்டுகள் கட்சிக்காக பாடுபட்டிருக்க வேண்டும். நமது கட்சியில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்ைகயை குறைப்பது அவசியம். அவர்கள் பணியாற்றி, முன்னேறட்டும். ஒரே குடும்பத்தில் ஐந்து, ஆறு உறுப்பினர்கள், கட்சியில் இருக்கக்கூடாது.

இந்திய ஒன்றியத்தில், மாநிலங்கள், மக்கள் ஆகியோர் ஒருவருக்கொருவர் உரையாட அனுமதிக்க வேண்டும். உரையாடலுக்கு மாற்று வன்முறைதான். நாடாளுமன்றத்தில் மைக்குகள் துண்டிக்கப்பட்டு, எம்.பி.க்கள் வெளியே தூக்கிவீசப்படுகிறார்கள். அங்கு உரையாடல் அனுமதிக்கப்படுவது இல்லை. நீதித்துறை, தேர்தல் கமிஷன் ஆகியவை நிர்பந்திக்கப்படும்போதும் அதுதான் நடக்கிறது. ‘பெகாசஸ்’ பற்றி ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் தெரியும். அது மென்பொருள் அல்ல. அரசியல்வாதிகளின் வாயை அடக்கும் முறை.

நான் பயப்படவில்லை

நாட்டை மத அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜனதாவும் பிளவுபடுத்தி வருகின்றன. அவற்றுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடுவதுதான் எனது இலக்கு. நம் நாட்டில் வெறுப்பும், கோபமும், வன்முறையும் பரப்பப்படுவதை என்னால் ஏற்க முடியவில்லை.

நமக்கு எதிராக பெரும் சக்திகள் இருக்கின்றன. நாம் மோதுவது ஒரு அரசியல் கட்சியுடன் மட்டுமல்ல. ஒவ்வொரு அமைப்புடனும் போராடுகிறோம். பெருமுதலாளிகளுடன் போராடுகிறோம். இந்த போரைக் கண்டு நான் பயப்படவில்லை. நான் எந்த ஊழலும் செய்யவில்லை. ஒரு காசு கூட எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, உண்மையை சொல்ல பயப்பட மாட்டேன்.

மாநில கட்சிகள்

மாநில கட்சிகள் அவற்றுக்கான இடத்ைத கொண்டுள்ளன. ஆனால், மாநில கட்சிகளால் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியாது. ஏனென்றால் அக்கட்சிகளுக்கு எந்த சித்தாந்தமும் கிடையாது. இது எளிதான போர் இல்லை. அரசியல் போரும் இல்லை. நாட்டை காப்பதற்கான போர்.

பா.ஜனதாவின் பிரித்தாளும் கொள்கைகளால், இந்தியா பற்றி எரியும். அதனால், மாநிலங்கள் உள்பட ஒருவருக்கொருவருடன் உரையாடலை மீண்டும் தொடங்குவது காங்கிரசின் வேலை. அதை எந்த மாநில கட்சியும் செய்யாது. காங்கிரசால்தான் செய்ய முடியும். மக்கள் பிளவுபடுத்தப்படுவதை நாம் மக்களிடம் சொல்ல வேண்டும். அதற்காக தெருவில் இறங்குவோம். பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ்காரனாக போராடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story