கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
இந்த விபத்தில் காரில் இருந்த 4 வயது குழந்தையை பலத்த காயத்துடன் போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள கர்ஜன் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 தம்பதிகள் மற்றும் 2 குழந்தைகள் ஆகிய 6 பேர் காரில் நேற்று இரவு பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் நின்றுக்கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த கார் அதிபயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 2 தம்பதிகள் மற்றும் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கி இருந்த 4 வயது குழந்தையை காரில் இருந்து மீட்டனர். படுகாயமடைந்த குழந்தையை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.