தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஆணைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
கொறடா உத்தரவை மீறியதால் 6 பேர் மீதும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிம்லா,
இமாசல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர், மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி பா.ஜ.க. வேட்பாளருக்கு ஓட்டு போட்டு அவரை வெற்றி பெறச் செய்தனர். அதன்பின்னர் சட்டசபையில் பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்யும்படி காங்கிரஸ் கட்சி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.'பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும்படி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், 6 எம்.எல்.ஏ.க்கள் அதை மீறி, வெளியே இருந்தனர். அதனை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவேண்டும்' என சபாநாயகரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை நடத்திய சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா, தனது உத்தரவை ஒத்திவைத்தார். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால் அவர்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்கவில்லை. ஒரு வாரம் அவகாசம் கேட்டனர்.
இதையடுத்து கொறடா உத்தரவை மீறிய எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் மீதும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் கடந்த பிப்ரவரி 29ம் தேதி அறிவித்தார். ரஜிந்தர் ராணா, சுதிர் சர்மா, இந்தர் தத் லகன்பால், தேவிந்தர் குமார் பூட்டோ, ரவி தாக்கூர் மற்றும் சேதன்யா சர்மா ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இமாச்சலத்தில் கட்சித்தாவல் தடைச்சட்டத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.