மராட்டியத்தில் 4 ஆண்டுகளாக சட்டவிரோதமாக வசித்துவந்த வங்காளதேசத்தினர் - அதிர்ச்சி சம்பவம்


மராட்டியத்தில் 4 ஆண்டுகளாக சட்டவிரோதமாக வசித்துவந்த வங்காளதேசத்தினர் - அதிர்ச்சி சம்பவம்
x

File Photo (PTI)

தினத்தந்தி 12 March 2024 8:27 AM GMT (Updated: 12 March 2024 11:08 AM GMT)

மராட்டியத்தில் 4 ஆண்டுகளாக சட்டவிரோதமாக வசித்துவந்த வங்காளதேசத்தினர் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை,

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர், அடையாள அட்டையுடன் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் நவிமும்பையில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்துவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நவிமும்பையின் பெலபூர் பகுதியில் உள்ள ஷபாஸ் கிராமத்தில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த 5 பெண்கள் உள்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் 8 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அனைவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், 8 பேரும் உரிய ஆவணங்கள் இன்றி கடந்த 4 ஆண்டுகளாக இப்பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story