கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ராஜினாமா: பா.ஜ.க.வில் இணைகிறாரா?


கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ராஜினாமா: பா.ஜ.க.வில் இணைகிறாரா?
x
தினத்தந்தி 5 March 2024 11:28 AM GMT (Updated: 5 March 2024 12:14 PM GMT)

கடந்த சில நாட்களாக விடுப்பில் இருக்கும் அபிஜித்தின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டு பொறுப்பில் இருந்து அவரை விடுவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அபிஜித் கங்கோபாத்யாய். இவருக்கு இன்னும் பதவிக்காலம் 3 மாதங்கள் இருக்கும் நிலையில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் களம் இறங்கி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சிவஞானம் ஆகியோருக்கு அனுப்பினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அபிஜித் நாளை மறுநாள் (மார்ச் 7ம் தேதி) பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது, நான் பா.ஜ.க.வில் இணைந்தப்பிறகு எந்த மக்களவை தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் பா.ஜ.க.வில் தொடர்வேன். திரிணாமுல் காங்கிரஸ் போன்ற குற்றவாளிகள் நிறைந்த கட்சிக்கு எதிராக பா.ஜ.க. மட்டுமே போராடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நான் சேர்ந்திருக்கலாம். ஆனால், எனக்கு சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அக்கட்சிக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் போன்ற குடும்பம் ஆளும் கட்சியில் சேர்வது எந்த பயனும் இல்லை. 2009-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நடந்ததுதான் 2024-இல் திரிணாமுல் காங்கிரசுக்கு நடக்கப் போகிறது." என்றார்.

கடந்த சில நாட்களாக விடுப்பில் இருக்கும் அபிஜித்தின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டு பொறுப்பில் இருந்து அவரை விடுவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு வழக்கு விசாரணைகளின்போது, மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் - நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story