அ.தி.மு.க.பொதுக்குழு வழக்கு: ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் எனக்குத்தான் - ஓ.பிஎஸ் வாதம் ; 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு


அ.தி.மு.க.பொதுக்குழு வழக்கு: ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் எனக்குத்தான் - ஓ.பிஎஸ் வாதம் ; 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 6 Jan 2023 9:31 AM GMT (Updated: 6 Jan 2023 9:31 AM GMT)

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி,

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இரண்டு நாட்களாக இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. நேற்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த வழக்கில் 3-வது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. 12 மணியளவில் விசாரணை தொடங்கியதும் ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது.

அதன் முக்கிய விவரம் வருமாறு:-

* இரட்டை தலைமை காலாவதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொது குழுவை கூட்ட முடியும்.

* கட்சியின் தலைவர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யபட வேண்டும் என எம்ஜிஆர் விதிகளை உருவாகியுள்ளார் அதை யாராலும் மாற்ற இயலாது என வாதிடப்பட்டது.

* அ.தி.மு.க.வில், கட்சி முடிவுகளை அடிப்படை தொண்டர்கள் மூலமாகவே எடுக்க எம்.ஜி.ஆர். விரும்பினார்; சில முக்கிய விதிமுறைகளை எப்போதும் மாற்றியமைக்க கூடாது எனவும் அவர் விரும்பினார்

* அ.தி.மு.க.வின் நிறுவனர் எம்.ஜி.ஆர்-ன் மறைந்தபோது கட்சி பிளவை சந்தித்தது அதற்கு பின்னர் ஜெயலலிதா கட்சியின் நிர்வாகத்தை கையில் எடுத்தார், அதற்குப் பிறகு சட்ட விதிகள் படி அதிமுக செயல்பட்டு வருகிறது"

* கட்சி விதிகளை எல்லாம் அவசர கதியில் பழனிசாமி தரப்பினர் மாற்றியுள்ளனர்; அ.தி.மு.க.வின் அடிப்படை நோக்கமே மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

* தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் இல்லை.

* தனி மனிதனின் சுயநலத்துக்காகவும், பதவி வெறிக்காகவும் கட்சியை பலி கொடுக்கிறார்கள்

* அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் எனக்குத்தான் உள்ளது; அ.தி.மு.க.வில் இப்போது தேர்தல் நடந்தால் கூட நான்தான் வெற்றி பெற்று ஒற்றைத் தலைமையில் அமருவேன்.


Next Story