ஆந்திர ரெயில் விபத்து: மத்திய - மாநில அரசுகள் நிவாரணம் அறிவிப்பு


ஆந்திர ரெயில் விபத்து: மத்திய - மாநில அரசுகள் நிவாரணம் அறிவிப்பு
x

Image Courtacy: ANI

தினத்தந்தி 29 Oct 2023 5:55 PM GMT (Updated: 30 Oct 2023 12:36 AM GMT)

ஆந்திர ரெயில் விபத்து காரணமாக 3 ரெயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

விஜயநகரம்,

விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடாவிற்கு சென்று கொண்டிருந்த பேசஞ்சர் ரெயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பலாசா எக்ஸ்பிரஸ் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயில் மீது மோதியதாக சொல்லப்படுகிறது.

இந்த பயங்கர விபத்தில் பலாசா ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் சிக்கி 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ரெயில்கள் விபத்துக்கு உள்ளான தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ஆந்திர ரெயில் விபத்து : 3 ரெயில்கள் ரத்து

இந்த சூழலில் ஆந்திர ரெயில் விபத்து காரணமாக 3 ரெயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 ரெயில்கள் மாற்று திசையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அதே தண்டவாளத்தில் காத்திருக்கும் 3 ரெயில்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ரெயில் விபத்து : மத்திய- மாநில அரசுகள் நிவாரணம்

ஆந்திர ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஆந்திர ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


Next Story