அரவிந்த் கெஜ்ரிவாலின் நிலை காங்கிரசுக்கு ஒரு பாடம்: கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்


அரவிந்த் கெஜ்ரிவாலின் நிலை காங்கிரசுக்கு ஒரு பாடம்: கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்
x

டெல்லி மதுபான கொள்கை ஊழல் குறித்து போலீசில் முதன்முதலில் புகார் அளித்தது காங்கிரஸ் கட்சிதான் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்கொள்ளும் சூழ்நிலையில் இருந்து காங்கிரஸ் கட்சி பாடம் கற்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கோழிக்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன் கூறுகையில், "நேற்று (மார்ச் 31) புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பேரணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு இந்த பேரணி ஒரு வலுவான எச்சரிக்கையை அளித்துள்ளது. அதேநேரத்தில், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பா.ஜ.க. நடத்தும் தாக்குதல் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை சரியல்ல.

டெல்லி அரசால் நடந்ததாக கூறப்படும் மதுபான உரிம ஊழல் குறித்து போலீசில் முதன்முதலில் புகார் அளித்தது காங்கிரஸ் கட்சிதான். அமலாக்கத்துறை அதை பயன்படுத்தி கொண்டது. டெல்லி மந்திரி மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டபோது, கெஜ்ரிவாலை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய கட்சியும் காங்கிரஸ் தான்.

பா.ஜ.க.வில் இணையாவிட்டால், சிறை செல்ல நேரிடும் என மிரட்டியதன் காரணமாகவே பல காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியில் இணைந்ததாக ராகுல் காந்தி கூறி இருக்கிறார். அரசியலில் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும். அரசியலை கைவிடுவது அதற்கு தீர்வாகாது. துன்பங்களுக்கு எதிராக போராட வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க.வுக்கு இடம்பெயர்வதை நியாயப்படுத்த முடியாது. கெஜ்ரிவாலின் அனுபவம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பெரிய வாழ்க்கைப் பாடம். முடிவுகளை எடுக்கும்போது தேசத்தின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்க காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும்.

அரசியல் சாசன மற்றும் மதச்சார்பற்ற மதிப்புகளை 10 ஆண்டு கால மோடி அரசு நீர்த்துப்போகச் செய்துள்ளது. மதச்சார்பின்மை மீது ஆர்.எஸ்.எஸ்.க்கு இருக்கும் அதிருப்தியைப் போக்க பா.ஜ.க. நடவடிக்கை எடுத்து வருகிறது. வகுப்புவாதத்தை எதிர்ப்பதன் மூலம் மட்டுமே மதச்சார்பின்மையை பாதுகாக்க முடியும்.

மக்களவை தேர்தலில் சி.பி.ஐ. தலைவர் ஆனி ராஜாவுக்கு எதிராக வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதை ஏற்க முடியாது. இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு கட்சிக்கு எதிராக போட்டியிடுவதை காங்கிரஸ் கட்சியால் எவ்வாறு நியாயப்படுத்த முடியும். பா.ஜ.க.வை எதிர்த்து ஏன் நேரடியாக போட்டியிடக் கூடாது?" என்று தெரிவித்துள்ளார்.


Next Story