மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கு 12-ந்தேதி விசாரணை


மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கு 12-ந்தேதி விசாரணை
x

தயாரிப்பாளர் தரப்பு தாக்கல் செய்த ரிட் மனு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 12-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை,

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு மேற்குவங்காள அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அந்த மனுவில், திரைப்படத்திற்கு மத்திய சான்றளிப்பு வாரியம் சான்றளித்த பிறகு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், திரைப்படத்துக்கான தடையை விதிக்க சட்டம் ஒழுங்கை மாநில அரசு காரணமாக காட்ட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தியேட்டர் உரிமையாளர்களுக்கு விடுத்த எச்சரிக்கை காரணமாக, திரைப்படம் திரையிடப்படாமல் மறைமுக தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும், தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை காரணமாக நாள்தோறும் திரைப்படத்தின் வருமானதிற்கு பாதிப்பு ஏற்படுவதால், வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, தயாரிப்பாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு வரும் 12-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.



Next Story