பெல்லந்தூர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் 43 பேர் கைது


பெல்லந்தூர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் 43 பேர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:45 PM GMT)

பெல்லந்தூர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 43 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

பெல்லந்தூர்:

பெல்லந்தூர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 43 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

குற்றச்சம்பவங்கள்

பெங்களூருவில் வெளிநாட்டினர் பலர் சட்டவிரோதமாக தங்கி, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

கடந்த வாரம் பெங்களூரு பெல்லந்தூர் பகுதியில் வங்க தேசத்தை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனையில் தெரியவந்தது. அதையடுத்து பெல்லந்தூர் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த மேலும் 3 வங்க தேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.

43 பேர் கைது

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தி அவர்கள் தங்கி இருந்தது தெரிந்தது. மேலும் அந்த பகுதியில் வங்க தேசத்தை சேர்ந்த ஏராளமானோர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து பெல்லந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெல்லந்தூர் பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 43 பேரை கைது செய்தனர்.

போலி அடையாள அட்டைகள்

விசாரணையில் அவர்கள் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து பெங்களூருவில் பதுங்கி இருந்து வந்ததும் தெரிந்தது. மேலும் அவர்கள் இடைத்தரகர்கள் மூலம் ரூ.20 ஆயிரம் செலவில் இந்தியாவுக்குள் நுழைந்ததும் தெரிந்தது. அவர்களிடம் ஆதார் உள்ளிட்ட போலி அடையாள அட்டைகள் இருந்ததும் தெரிந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சார்பில் கூறுகையில் லக்னோவில் பதுங்கி இருந்த கலில் சாப்ரசி என்ற வங்க தேசத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து இருந்ததாகவும், அவர் கொடுத்த தகவலின்பேரில் பெங்களூருவில் சோதனை நடத்தியதாகவும், இதில் சட்டவிரோதமாக பதுங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 43 பேர் சிக்கி இருப்பதாகவும் கூறினர்.


Next Story