காண்டிராக்டர்கள் விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிடமாட்டார்; பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு


காண்டிராக்டர்கள் விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிடமாட்டார்; பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Aug 2023 12:15 AM IST (Updated: 12 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக காங்கிரஸ் அரசின் தயவில் ராகுல் காந்தி இருப்பதால், காண்டிராக்டர்கள் விவகாரத்தில் அவர் தலையிட மாட்டார் என பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் அரசின் தயவில் ராகுல் காந்தி இருப்பதால், காண்டிராக்டர்கள் விவகாரத்தில் அவர் தலையிட மாட்டார் என பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பாக்கி பட்டுவாடா

கர்நாடக காங்கிரஸ் அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டித்து நாங்கள் சட்ட ரீதியிலான போராட்டத்தை நடத்த உள்ளோம். துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தன் மீதான குற்றச்சாட்டை திசை திருப்புகிறார். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது காண்டிராக்டர்களுக்கு பட்டுவாடா செய்ய பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.650 கோடி விடுவித்தோம்.விசாரணை நடத்துகிறோம் என்ற பெயரில் அந்த நிதியை பட்டுவாடா செய்யாமல் வைத்துக் கொண்டுள்ளனர். இது சந்தேகத்தை எழுப்புகிறது. கமிஷன் குற்றச்சாட்டு தொடர்பாக காண்டிராக்டர்களே சத்தியம் செய்ய வருமாறு டி.கே.சிவக்குமாருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். காண்டிராக்டர்களுக்கு பாக்கியை பட்டுவாடா செய்யும் பணியை இந்த அரசு செய்ய வேண்டும்.

தலையிட மாட்டார்

கர்நாடக காண்டிராக்டர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா, மந்திரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். அவருக்கு என்ன அழுத்தம் உள்ளதோ தெரியவில்லை. காண்டிராக்டர்கள் கவர்னரிடமும் புகார் செய்துள்ளனர். மாநகராட்சிக்கு வரி மூலம் வருவாய் கிடைத்துள்ளது. அதன் மூலம் பாக்கியை பட்டுவாடா செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் ராகுல் காந்தி தலையிட மாட்டார்.

அவர் காங்கிரஸ் அரசின் தயவில் உள்ளார். அதனால் இந்த விஷயம் குறித்து அவர் பேச மாட்டார். மக்களுக்கு தேவையான பணிகளை செய்யாவிட்டால் இந்த அரசின் பிராண்டு பெங்களூரு திட்டம் வெற்றி பெறாது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

1 More update

Next Story