நீட் வினாத்தாள் கசிவு: ஜார்க்கண்ட்டில் 6 பேர் கைது


நீட் வினாத்தாள் கசிவு: ஜார்க்கண்ட்டில் 6 பேர் கைது
x

நீட் வினாத்தாள் கசிந்த சம்பவத்தில் ஜார்க்கண்ட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஞ்சி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது.

இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நீட் தேர்வில் 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தேர்வு மையத்தில் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட குறைவான நேரமே ஒதுக்கப்பட்டதாக கூறி 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு வினாத்தாள் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும், ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்நிலையில், வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 6 பேரை பீகார் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடைய 6 பேர் ஜார்க்கண்ட்டின் டியோகர் மாவட்டம் தேவிபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக பீகார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜார்க்கண்ட் விரைந்த பீகார் போலீசார், வீட்டில் பதுங்கி இருந்த 6 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக பீகார் அழைத்து செல்லப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story