ரெயிலில் சாக்லெட் சாப்பிட்ட 8 பேருக்கு திடீர் மயக்கம்


ரெயிலில் சாக்லெட் சாப்பிட்ட 8 பேருக்கு திடீர் மயக்கம்
x

கோவாவில் இருந்து டெல்லி சென்ற ரெயிலில் மர்மநபர் கொடுத்த சாக்லெட்டை சாப்பிட்ட 8 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்ளையடிக்க மர்மநபர் திட்டமிட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெலகாவி:

கோவாவில் இருந்து டெல்லி சென்ற ரெயிலில் மர்மநபர் கொடுத்த சாக்லெட்டை சாப்பிட்ட 8 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்ளையடிக்க மர்மநபர் திட்டமிட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

8 பேருக்கு மயக்கம்

டெல்லி-கோவா இடையே பெலகாவி வழியாக வாஸ்கோ-நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கோவாவில் இருந்து நிஜாமுதீன் நோக்கி அந்த ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் பொதுப்பெட்டியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிலர் பயணித்தனர். இந்த நிலையில், அவர்களுக்கு ஒருவர் சாக்லெட் கொடுத்துள்ளார். அதை வாங்கி அவர்கள் சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து சாக்லெட் சாப்பிட்ட 8 பேர் திடீரென மயங்கினர். இதற்கிடையே அந்த ரெயில் பெலகாவி ரெயில் நிலையத்துக்கு வந்தது.

அப்போது அதில் பயணித்த சக பயணிகள், இதுகுறித்து உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் மயக்கம் அடைந்த 8 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 6 பேர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் 2 பேர் மயக்க நிலையில் உள்ளதாக டாக்டர் கூறினார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொள்ளையடிக்க திட்டமா?

இதுகுறித்து ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கோவாவில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரிந்தது. திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு அவர்கள் ரெயிலில் பயணித்தபோது இந்த சம்பவம் நடந்ததும் தெரிந்தது. மர்மநபர்கொள்ளையடிக்க திட்டமிட்டு மயக்க சாக்லெட் கொடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து பெலகாவி ரெயில்வே போலீசார் கூறுகையில், சம்பவம் நடைபெற்ற கோவா மாநில எல்லைக்குள் என்பதால் இந்த வழக்கு கோவா போலீசாருக்கு மாற்றப்பட உள்ளதாக கூறினர்.


Next Story