எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவலை தடுக்க பா.ஜனதா தலைவர்கள் தீவிர ஆலோசனை
பெங்களூருவில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவலை தடுக்க எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா தீவிர ஆலோசனை நடத்தியது.
பெங்களூரு:
பெங்களூருவில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவலை தடுக்க எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா தீவிர ஆலோசனை நடத்தியது.
எஸ்.டி.சோமசேகர் ஆதரவாளர்கள்
பா.ஜனதாவை சேர்ந்த யஷ்வந்தபுரம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.டி.சோமசேகர் அக்கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் காங்கிரசில் இணையும் விழா பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் அவரது ஆதரவாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் ராஜண்ணா, ஆர்யா சீனிவாஸ், சிவமாதையா, நரசிம்மமூர்த்தி, ரேவண்ண சித்தப்பா, ரகு, சிவண்ணா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். அவர்கள் அனைவரும் யஷ்வந்தபுரம் தொகுதியை சேர்ந்த பா.ஜனதாவினர் ஆவார்கள். ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த சில நிர்வாகிகளும் காங்கிரசில் சேர்ந்துள்ளனர். கட்சியில் சேர்ந்தவர்களுக்கு டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கொடி வழங்கி வரவேற்றார்.
பா.ஜனதாவுக்கு பின்னடைவு
இந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியில் சேர்ந்தவர்கள், பா.ஜனதாவில் தொந்தரவு கொடுப்பதாகவும், அதனால் தாங்கள் காங்கிரசில் சேர்ந்ததாகவும் கூறினர். மேலும் அவர்கள், எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ.வும் காங்கிரசில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
அடுத்து வரும் நாட்களில் எஸ்.டி.சோமசேகரும் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேருவார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிவராம் ஹெப்பாரும் காங்கிரசுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவ்வாறு அவர்கள் கட்சி தாவினால், அது பெங்களூருவில் பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
ஒருங்கிணைப்பு குழு
எஸ்.டி.சோமசேகர் ஆதரவாளர்கள் காங்கிரசில் சேர்ந்துள்ள நிலையில், நேற்று கர்நாடக பா.ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடா, முன்னாள் மந்திரிகள் ஆர்.அசோக். சி.டி.ரவி, அஸ்வத் நாராயண், ஈசுவரப்பா, கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கோர்ட்டில் வழக்கு
சில எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு செல்வதாக வெளியான தகவல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதனால் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவலை தடுக்க எடியூரப்பா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பேசிய எடியூரப்பா, அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேசி இருப்பதாகவும், அவர்கள் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் என்றும் கூறினார். மேலும் அந்த எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், கட்சிக்கு புதிய தலைவர், எதிா்க்கட்சி தலைவர் நியமனங்களை விரைவாக மேற்கொள்ள கட்சி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் அரசின் தோல்விகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது. குறிப்பாக காவிரி நீர் பிரச்சினையில் விவசாயிகள் அரசு மீது அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதால், அவர்களுடன் கைகோர்த்து போராடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பெங்களூரு மாநகராட்சி வார்டு மறுசீரமைப்பு குறித்து கோர்ட்டில் வழக்கு தொடருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.