அதிகாரிகளுடன் சுர்ஜேவாலா ஆலோசனை; கவர்னரிடம் பா.ஜனதா தலைவர்கள் புகார்


அதிகாரிகளுடன் சுர்ஜேவாலா ஆலோசனை; கவர்னரிடம் பா.ஜனதா தலைவர்கள் புகார்
x

பெங்களூருவில் அதிகாரிகளுடன், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா ஆலோசித்தது குறித்து கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் பா.ஜனதா தலைவர்கள் புகார் அளித்திருப்பதுடன், விசாரணைக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பெங்களூரு:

கவர்னரிடம் பா.ஜனதா புகார்

கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்து வருபவர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா. இவர், நேற்று முன்தினம் பெங்களூருவில் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி இருந்தார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுர்ஜேவாலா பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்திற்கு சுர்ஜேவாலா அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்யவில்லை என்று முதல்-மந்திரி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகளுடன், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா ஆலோசனை நடத்திய விவகாரம் குறித்து நேற்று பா.ஜனதா தலைவர்கள், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து புகார் அளித்தார்கள்.

விசாரணை நடத்த கோரிக்கை

முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் தலைமையில் கவர்னர் மாளிகையில் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து இந்த புகாரை கொடுத்திருந்தார்கள். அத்துடன் அதிகாரிகளுடன், சுர்ஜேவாலா அமர்ந்து பேசுவது தொடர்பான புகைப்படம், அந்த கூட்டத்தில் அவர் என்ன பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்களையும் பா.ஜனதாவினர் கவர்னரிடம் வழங்கி இருக்கிறார்கள்.

மேலும் மந்திரி உள்ளிட்ட எந்த பதவியிலும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருக்கும் சுர்ஜேவாலா மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்து இருப்பதால், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கவர்னரிடம் பா.ஜனதா தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story