மத்திய பிரதேசத்தில் "பாஜக புயல்" காங்கிரசை வேரோடு பிடுங்கி எறியும் - பிரதமர் மோடி பேச்சு


மத்திய பிரதேசத்தில் பாஜக புயல் காங்கிரசை வேரோடு பிடுங்கி எறியும் - பிரதமர் மோடி பேச்சு
x

போபால்,

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. சிவராஜ் சிங் சவுகான் முதல்-மந்திரியாக பொறுப்பில் இருக்கிறார். இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 17ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த முறை நடந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி பின்னர் பாஜகவிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அதே போல,கைப்பற்றிய ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

இந்தநிலையில், ஷாஜாபூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

கடந்த சில நாட்களாக நான் மத்திய பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து ஆசி பெற்றேன். பாஜக மீது அவர்கள் காட்டும் நம்பிக்கை, எங்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

டெல்லியில் அமர்ந்து கொண்டு தேர்தல் கணக்கீடுகளைச் செய்பவர்களால் தங்கள் மதிப்பீடு குறித்து ஆய்வு செய்ய முடியவில்லை.

மக்களின் அமோக ஆதரவின் காரணமாக, மத்தியப் பிரதேசத்தில் பாஜக புயல், காங்கிரஸை வேரோடு பிடுங்கி எறியும். எங்கள் மீதான உங்கள் அன்பு பலரின் தூக்கத்தை கெடுக்கிறது. காங்கிரஸ் வரும் இடமெல்லாம் பேரழிவு ஏற்படும். காங்கிரசின் சுரண்டல்களை யாராலும் மறக்க முடியாது. படுபாதாளத்தில் இருந்த மத்தியப் பிரதேசத்தை பாஜக மிகவும் சிரமப்பட்டு மீட்டுள்ளது என்றார்.


Next Story