இந்தியாவில் இருந்து ஜனநாயகத்தை ஒழிக்க பாஜக நினைக்கிறது - பிரியங்கா காந்தி
இந்தியாவில் இருந்து ஜனநாயகத்தை ஒழிக்க பாஜக நினைக்கிறது என்று பிரியங்கா காந்தி கூறினார்.
டெல்லி,
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு 'அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
மோடியின் பெயர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியிருந்ததாக கூறி ராகுல்காந்தி மீது பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் முன்தினம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது.
இதனிடையே, ரெயில்வேயில் வேலை வாங்கி தர நிலத்தை லஞ்சமாக பெற்று பணமோசடி செய்ததாக வழக்கு தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகளும் எம்.பி.யுமான மிசா பாரதியிடம் அமலாக்கத்துறையினர் இன்று விசாரணை நடத்தினர். இதே வழக்கில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ்வும் இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடமும் வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவியான பிரியங்கா காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்த நாட்டில் இருந்து ஜனநாயகத்தையும், எதிர்க்கட்சியையும் ஒழிக்க பாஜக நினைக்கிறது. அதனால் தான் மக்களின் குரலாக உள்ள எதிர்க்கட்சிகளை பாஜக தொடர்ந்து தாக்குகிறது. ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.