பா.ஜ.க. 370 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும்.. பிரதமர் மோடி பேசியதன் பின்னணி இதுதான்..!


பா.ஜ.க. 370 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும்.. பிரதமர் மோடி பேசியதன் பின்னணி இதுதான்..!
x

ஒவ்வொரு பூத் ஏஜெண்டும் அவர்களின் வாக்குச் சாவடிகளில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்ற தொடங்கி உள்ளன. ஆளுங்கட்சியான பா.ஜ.க.வினர் இந்த முறையும் ஆட்சியை தக்க வைப்போம் என்ற நம்பிக்கையில் சுறுசுறுப்பாக பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் தேசிய மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. மாநாட்டிற்கு முன்னதாக கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றி 370 இடங்களை வென்றெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

370 இடங்களில் வெற்றி பெறுவது சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அளிக்கும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஒவ்வொரு பூத் ஏஜெண்டும் அவர்களின் வாக்குச் சாவடிகளில் கவனம் செலுத்த வேண்டும், 2019-ம் ஆண்டு தேர்தலில் பெற்றதைவிட வரும் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கட்சிக்கு குறைந்தபட்சம் 370 வாக்குகள் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

ஏழைகளுக்கான நலத்திட்ட பணிகள் செய்வதுடன், நாட்டின் வளர்ச்சி மற்றும் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பது உள்ளிட்ட விஷயங்களை மக்களிடம் விளக்கி பிரசாரம் செய்யவேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவை கடுமையாக எதிர்த்தவர் பா.ஜ.க. சித்தாந்தவாதி சியாமா பிரசாத் முகர்ஜி. இந்த சட்டப்பிரிவை மோடி அரசாங்கம் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story