பால விபத்து; குஜராத் அரசின் கடுமையான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்: ஐகோர்ட்டு


பால விபத்து; குஜராத் அரசின் கடுமையான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்:  ஐகோர்ட்டு
x

குஜராத் தொங்கு பால விபத்தில் மாநில அரசின் கடுமையான நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.



மோர்பி,


குஜராத்தில் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நூறாண்டு பழமையான தொங்கு பாலம் ஒன்று புனரமைக்கப்பட்டு, மறுபயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், 4 நாட்களில் கடந்த அக்டோபர் 30-ந்தேதி பாலம் இடிந்து விழுந்தது.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் சரியாக மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இதுதவிர துருப்பிடித்த, பழைய கேபிள் வயர்கள் மற்றும் அதிக எடை உள்ளிட்டவை விபத்துக்கான காரணிகளாக கூறப்படுகின்றன.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாட்ட விடுமுறை முடிந்து குஜராத் ஐகோர்ட்டு மீண்டும் இன்று திறக்கப்பட்டது. இதில், குஜராத் தொங்கு பால விபத்து வழக்கை தானாக முன்வந்து கோர்ட்டு விசாரணைக்கு எடுத்து கொண்டது.

இந்த சம்பவத்தில் நிலைமையின் தீவிர தன்மையை கவனத்தில் கொண்டு, விசாரணையை கையிலெடுத்த ஐகோர்ட்டு, இந்த வழக்கில் பதிலளிக்கும்படி உள்துறை உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

7 நாட்களுக்கு பின்னர், பால விபத்து சம்பவம் பற்றி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட்டு கேட்டு கொண்டுள்ளது. குஜராத் தொங்கு பால விபத்தில் மாநில அரசின் கடுமையான நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.


Next Story