மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் டெல்லி பயணம்
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். மந்திரி பதவி கேட்டு எம்.எல்.ஏ.க்களும் டெல்லிக்கு படையெடுத்து உள்ளனர்.
பெங்களூரு:
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். மந்திரி பதவி கேட்டு எம்.எல்.ஏ.க்களும் டெல்லிக்கு படையெடுத்து உள்ளனர்.
மந்திரி பதவிக்காக அடம்
கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. அதன்பிறகு, முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதால், டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் 4 நாட்கள் ஆலோசனை நடத்தினார்கள். 5-வது நாளில் தான் முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கடந்த 20-ந் தேதி அவர்கள் பதவி ஏற்றனர். சித்தராமையா, டி.கே.சிவக்குமாருடன் 8 மந்திரிகளும் பதவி ஏற்றனர். இதுவரை மந்திரிகளுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் மந்திரிசபையில் மீதம் இருக்கும் 24 இடங்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த தலைவர்களான தேஷ்பாண்டே, எச்.கே.பட்டீல் உள்ளிட்டோரும் மந்திரி பதவி கேட்டு அடம் பிடித்து வருகின்றனர்.
சித்தராமையா டெல்லி பயணம்
40 முதல் 45 எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி கேட்பதாலும், சித்தராமையா, டி.கே.சிவக்குமார் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுக்கு மந்திரி பதவி கேட்பதாலும், யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பதில் காங்கிரஸ் மேலிடத்திற்கு தலைவலி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் மற்றும் கட்சி மேலிடம் முடிவு செய்திருக்கிறது.
மந்திரி பதவிக்கு ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளதால், இன்னும் 20 இடங்களை மட்டும் நிரப்பி விட்டு மீதி 4 இடங்களை காலியாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், சித்தராமையா தரப்பை சேர்ந்த 10 பேருக்கும், டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் 10 பேருக்கும் மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மாலை 6.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
இன்று விரிவாக ஆலோசனை
இதுபோல், துணை முதல்-மந்திரியான டி.கே.சிவக்குமார் நேற்று மதியம் 3 மணிக்கே டெல்லிக்கு புறப்பட்டு சென்று விட்டார். நேற்று இரவு காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து டி.கே.சிவக்குமார் பேசினார். நேற்று இரவு முதல்-மந்திரி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் டெல்லியிலேயே தங்கினார்கள். இன்று (வியாழக்கிழமை) மந்திரிசபை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனால் அவர், அமெரிக்கா செல்லும் முன்பாக மந்திரிசபையில் யார், யார் இடம் பெற வேண்டும் என்பதை இறுதி செய்து, இன்றே ராகுல்காந்தியிடமும் அனுமதி பெற காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தனித்தனி பட்டியல்
மந்திரிசபையில் யாருக்கெல்லாம் இடம் கொடுக்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் என்ற அடிப்படையிலும், துணை முதல்-மந்திரியாகவும் டி.கே.சிவக்குமார் ஒரு பட்டியலையும், முதல்-மந்திரி சித்தராமையா தனியாக ஒரு மந்திரி பட்டியலையும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு பட்டியலையும் தயாரித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் யாருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதே நேரத்தில் மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் டெல்லிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அதாவது சித்தராமையா, டி.கே.சிவக்குமார் நேற்று டெல்லிக்கு செல்வதற்கு முன்பாகவே கிருஷ்ண பைரேகவுடா, தினேஷ் குண்டுராவ், நாகேந்திரா உள்ளிட்ட ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து மந்திரி பதவி வழங்கும்படி அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.