மனைவி மீது தனியார் நிறுவன ஊழியர் பரபரப்பு புகார்


மனைவி மீது தனியார் நிறுவன ஊழியர் பரபரப்பு புகார்
x

குடும்பத்தினரை அழைத்து வந்து தாக்குவதாக மனைவி மீது தனியார் நிறுவன ஊழியர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு பசவனகுடியில் வசித்து வருபவர் கம்ரான் கான் (வயது 40), தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் இலியாஸ் நகரை சேர்ந்த ஆயிஷா பர்கீன் (37) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. இந்த நிலையில், கம்ரான் கான் வீட்டுக்குள் புகுந்து, ஆயிஷாவின் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியதுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் உடைத்து நாசப்படுத்தி இருந்தார்கள். இந்த விவகாரம் தொடர்பாக பசவனகுடி போலீஸ் நிலையத்தில் தனது மனைவி ஆயிஷா பர்கீன், மாமனார் ஆரிப் பாஷா, மாமியார் ஹீனா கவுசர், மைத்துனர் முகமது மொயின் ஆகிய 4 பேர் மீதும் கம்ரான் கான் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-

எனக்கும், ஆயிஷா பர்கீனுக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. திருமணமான நாளில் இருந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாக கூறி, வீட்டில் சமைப்பது உள்ளிட்ட எந்த வேலையும் செய்வதில்லை. தினமும் மதியம் 12 மணிக்கு தான் தூங்கி எழுந்திருப்பார். அவரது வேலையை பார்த்துவிட்டு மாலை 5.30 மணிக்கு தூங்கி விடுவார். எனது தாய் தான் சமைத்து கொடுப்பார். அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவதுடன், 20 நாட்கள் திரும்பி வர மாட்டார். எனது சொத்துகளை அபகரிக்க தான் என்னை திருமணம் செய்திருந்தார்.

உடல் நலக்குறைவை காரணம் காட்டி வேலை செய்யாமல் இருந்து தொல்லை கொடுத்ததுடன், இதுபற்றி கேட்டதற்கு குடும்பத்தினரை அழைத்து வந்து தாக்குதல் நடத்தி காயப்படுத்தி இருந்தார் என்று கூறி இருந்தார். அந்த புகாரின் பேரில் ஆயிஷா பர்கீன் உள்பட 4 பேர் மீதும் பசவனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story