காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை என்னை 91 முறை அவதூறாக பேசி உள்ளனர் - பிரதமர் மோடி


காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை என்னை 91 முறை அவதூறாக பேசி உள்ளனர் - பிரதமர் மோடி
x

காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை என்னை 91 முறை அவதூறாக பேசியுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார்.

சட்டசபை தேர்தல்

கா்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி முதல் முறையாக நேற்று பிரசாரத்தை தொடங்கினார். உம்னாபாத்தில் சினகேரி பகுதியில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, பிரதமர் மோடி பேசுகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசியதை மறைமுகமாக குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

வெறுப்பு அரசியல்

சாமானிய மக்களின் பிரச்சினைகளை பேசுகிறவர்களை, ஊழல்களை வெளியே கொண்டு வருகிறவர்களை, அவர்களின் சுயநல கொள்கைகளை விமர்சிப்பவர்களை காங்கிரஸ் வெறுக்கிறது. காங்கிரசின் இந்த வெறுப்பு தொடர்ந்து நிரந்தரமாக நீடித்து வருகிறது. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் மீண்டும் என்னை பற்றி விமர்சிக்க தொடங்கியுள்ளது.

எனக்கு எதிராக தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் செய்த விமர்சனங்களை யாரோ ஒருவர் பட்டியலிட்டு எனக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுவரை காங்கிரஸ் தலைவர்கள் என்னை 91 முறை பல்வேறு விதமாக அவதூறாக பேசியுள்ளனர். காங்கிரசார் என்னை பற்றி தவறாக பேசுவதை விட்டுவிட்டு நல்லாட்சி நடத்துவதிலும், தங்கள் கட்சி தொண்டர்களுக்கு தார்மிக ஊக்கத்தை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தி இருந்தால், அக்கட்சிக்கு இந்த மோசமான நிலை ஏற்பட்டிருக்காது.

திருடர்கள்

மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லது செய்கிறவா்களை அவமதிப்பது தான் காங்கிரசின் வரலாறு. என்னை மட்டும் அவர்கள் இவ்வாறு அவமதிக்கவில்லை, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 'சவுகிதார் சோர் ஹை' (காவலனே ஒரு திருடன்) என்று தவறாக பேசினர். அதன் பிறகு 'மோடி திருடன்' என்று விமர்சித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களை திருடர்கள் என்று கூறினர். காங்கிரசார் ஒருவரை தவறாக பேசும்போது, அவர்களுக்கு நிற்க முடியாத அளவுக்கு மக்கள் தக்க தண்டனையை வழங்கியுள்ளனர் என்பதை அக்கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த முறை உங்களை தவறாக பேசிய காங்கிரசாருக்கு ஓட்டுகள் மூலம் தக்க பாடம் புகட்ட மக்கள் முடிவு செய்துள்ளனர்.

அம்பேத்கரை அவமதித்தனர்

காங்கிரசார் அம்பேத்கரையும் அவமதித்தனர். தன்னை காங்கிரசார் அடிக்கடி தவறாக பேசியதாக அம்பேத்கரே விரிவாக கூறியுள்ளார். அம்பேத்கரை தேசத்துரோகி என்று கூறினர். 'ராட்ஷச' என்றும் அவரை அழைத்தனர். இதை கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். இன்றும் கூட வீரசாவர்க்கரை காங்கிரசார் அவமதிக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம்.

நமது நாட்டின் உயர்ந்த தலைவர்களை காங்கிரஸ் இவ்வாறு அவமதித்துள்ளது. இதை பார்க்கும்போது அம்பேத்கர், வீரசாவர்க்கர் வரிசையில் என்னையும் தவறாக பேசுகிறார்கள். இதை நான் எனக்கு கிடைத்த பரிசாக நினைக்கிறேன். காங்கிரசார் என்னை தவறாக பேசட்டும். ஆனால் நான் தொடர்ந்து நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்றுவேன்.

இரட்டை என்ஜின் அரசு

உங்களின் ஆசிர்வாதத்துடன் அவர்களின் அனைத்து இழி சொற்களும் மண்ணில் கலந்து மண்ணாகாட்டும். நீங்கள் (காங்கிரசார்) எந்த அளவுக்கு மண்ணை எங்கள் மீது வாரி இறைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு தாமரை மலரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கர்நாடகத்திற்கு இரட்டை என்ஜின் பா.ஜனதா அரசு வேண்டும். இதற்கு நிலையான, தனிப்பெரும்பான்மையுடன் கூடிய பா.ஜனதா அரசு அமைய மக்கள் வாக்களிக்க வேண்டும்.

நாட்டை காங்கிரஸ் பிளவுபடுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கவரும் அரசியலை தான் காங்கிரஸ் செய்கிறது. அந்த கட்சி முழுமையாக எதிர்மறையுடன் செயல்படுகிறது.

இவ்வாறு மோடி பேசினார்.


Next Story