குஜராத்தில் காங்கிரஸ்-பா.ஜ.க.வினர் மோதல் - 5 பேர் கைது


குஜராத்தில் காங்கிரஸ்-பா.ஜ.க.வினர் மோதல் - 5 பேர் கைது
x

குஜராத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காந்திநகர்,

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதை கண்டித்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதல் தொடர்பாக ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் உள்ளூர் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் போலீசார் 2 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளனர். இதன்படி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த சுமார் 450-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் மோதலில் ஈடுபட்ட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story