கா்நாடகத்தில் ரூ.1½ லட்சம் கோடியை கொள்ளையடித்த பா.ஜனதா அரசு - பிரியங்கா காந்தி


கா்நாடகத்தில் ரூ.1½ லட்சம் கோடியை கொள்ளையடித்த பா.ஜனதா அரசு - பிரியங்கா காந்தி
x

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு ரூ.1½ லட்சம் கோடியை கொள்ளையடித்து இருப்பதாக பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

தீவிர பிரசாரம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மேல்கோட்டையில் சர்வோதயா கர்நாடக கட்சி வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முதல் முறையாக கர்நாடகத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் மற்றும் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் பெறப்படுகிறது. இந்த கமிஷன் அரசு உங்களிடம்(மக்களிடம்) கொள்ளையடிக்கிறது. எந்த வெட்கமும் இல்லாமல் இந்த கமிஷன் அரசு உங்களிடம் கொள்ளையடிக்கிறது. 40 சதவீத கமிஷன் தர முடியாமல் ஒரு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். ஆனால் பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வளர்ச்சி பணிகள்

ஏனெனில் இதில் தவறு செய்தவர்கள் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள். பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் வீட்டில் இருந்து ரூ.8 கோடி பணம் சிக்கியது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு பதிலாக அந்த எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலம் நடத்தினார். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு ரூ.1½ லட்சம் கோடி கொள்ளையடித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பணத்தால் ஏராளமான வளர்ச்சி பணிகளை மேற்கொண்டிருக்க முடியும். இதனால் மக்கள் பயன் அடைந்திருப்பார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி கலாசாரம் உள்ளது. கர்நாடகத்தில் தற்போது நடைபெறும் பா.ஜனதா அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. பா.ஜனதா வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது. துரோகத்தின் பேரில் ஆட்சி அமைத்தனர். கடந்த 4 ஆண்டுகளில் இந்த பா.ஜனதா அரசு எந்த பணிகளையும் செய்யவில்லை. கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு வழங்கவில்லை.

கொள்ளை

போலீஸ், கல்லூரி விரிவுரையாளர், என்ஜினீயர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இவற்றின் மீது இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகள் சாப்பிடும் முட்டையிலும் ஊழல் செய்துள்ளனர். பிரதமர் மோடியின் நண்பர் அதானி, அம்பானி ஆகியோர் லட்சக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள்.

நிலத்தில் வியர்வை சிந்தும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,100 ஆக உயர்த்திவிட்டனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. உங்களின் பணத்தை கொள்ளையடித்து தொழில் அதிபர்களுக்கு வழங்குகிறார்கள்.

இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.


Next Story