தெலுங்கானாவின் வளர்ச்சிக்கான கனவுகளை காங்கிரஸ், பி.ஆர்.எஸ். தகர்த்துவிட்டன: பிரதமர் மோடி தாக்கு
நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசினார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது.
"நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதே மாற்றத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தெலங்கானாவிலும் கொண்டு வர வேண்டும்.
காங்கிரஸ், பி.ஆர்.எஸ். கட்சிகள் இணைந்து தெலுங்கானா வளர்ச்சியின் ஒவ்வொரு கனவையும் தகர்த்துவிட்டன. காங்கிரசுக்கு தெலுங்கானாவை அழிக்க 5 ஆண்டுகள் போதும்.
இன்று தெலுங்கானா மக்கள் மூன்றாவது முறையாக மோடியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்திருப்பதை நான் இங்கு காண்கிறேன். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
மோடியின் குடும்பம் 140 கோடி இந்தியர்கள். முன்பு முதல் மந்திரியாகவும், தற்போது பிரதமராகவும் கடந்த 23 ஆண்டுகளாக சேவையாற்ற எனக்கு வாய்ப்பு அளித்தீர்கள். நான் எனக்காக எந்த நாளையும் பயன்படுத்தவில்லை. கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தை நிறைவேற்றுவதுதான் மோடியின் உத்தரவாதம்." இவ்வாறு அவர் பேசினார்.