கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது


கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. பாரதீய ஜனதாவும், மதசார்பற்ற ஜனதா தளமும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன.

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்து வரும் பா.ஜனதா ஆட்சியின் பதவி காலம் வருகிற 24-ந்தேதி நிறைவடைகிறது.

சட்டசபை தேர்தல்

கர்நாடகத்தில் 16-வது சட்ட சபையை தேர்ந்தெடுப்பதற்காக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அடுத்த ஆண்டு(2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்த தேர்தலில் முக்கியமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியிலும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணா தொகுதியிலும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சென்னபட்டணா தொகுதியிலும், இன்னொரு முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் கனகபுரா தொகுதியிலும் போட்டியிட்டனர்.

கருத்து கணிப்பு

இந்த தேர்தலில் மொத்தம் 3 கோடியே 88 லட்சத்து 51 ஆயிரத்து 807 வாக்காளர்கள் வாக்களித்தனர். அதாவது 73.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும், தொங்கு சட்டசபை ஏற்படும் என்றும் மாறுபட்ட கருத்துகள் வெளியாகி இருந்தன.

ஓட்டு எண்ணிக்கை

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. சரியாக காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களின் தபால் ஓட்டுகளும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் செலுத்திய தபால் ஓட்டுகளும் எண்ணப்பட்டன. இதில் ஆளும் பா.ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இதில் ஆளும் பா.ஜனதாவும், காங்கிரசும் போட்டி போட்டு முன்னிலை பெற்று வந்தன.

நேரம் செல்ல செல்ல, காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஒரு கட்டத்தில் காங்கிரசுக்கு இணையாக பா.ஜனதா 90 தொகுதிகள் வரை முன்னிலையில் இருந்தது. காலை 11 மணிக்கு மேல் பா.ஜனதா முன்னிலையில் இருந்த தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தபடி இருந்தது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது

இறுதியில் தோ்தல் முடிவு வெளியிடப்பட்டதில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கட்சி 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் ஆதரவு வேட்பாளரான முன்னாள் விவசாய சங்கத் தலைவர் புட்டண்ணய்யாவின் மகன் தர்ஷன் புட்டண்ணய்யா மேல்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதையும் சேர்த்தால் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 137 ஆகும்.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா 104 இடங்களையும், காங்கிரஸ் 80 தொகுதிகளையும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பா.ஜனதாவுக்கு பின்னடைவு

பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்பு 8 முறை கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 7 நாட்கள் சூறாவளி பிரசாரம் நடத்தி 22 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார்.

அது மட்டுமின்றி பெங்களூருவில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு பிரதமர் மோடி 33 கிலோ மீட்டர் தூரம் திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்தி கட்சிக்கு ஆதரவு திரட்டினார்.

இவ்வாறு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட போதிலும் ஆளும் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. இது அந்தக் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. அக்கட்சி ஏற்கனவே தன்னிடம் இருந்த 14 இடங்களை பறிகொடுத்துள்ளது.

சித்தராமையா - பொம்மை

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவியிலும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணாவிலும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சென்னபட்டணாவிலும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுராவிலும், வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட 13 மந்திரிகள் படுதோல்வி அடைந்தனர். சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரி சிர்சி தொகுதியில் தோல்வி அடைந்தார்.

கர்நாடகத்தை காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு அக்கட்சி 124 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. அப்போது எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோர் பா.ஜனதாவை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டனர். அதனால் பா.ஜனதா 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை எடியூரப்பா, ஸ்ரீராமுலு உள்ளிட்டோரை உள்ளடக்கி பா.ஜனதா ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தது. ஆனால் அக்கட்சி 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்த கூட்டத்தை நடத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளர்கள் வரவுள்ளனர். புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா வருகிற 17-ந்தேதி அல்லது 18-ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி கொண்டாட்டம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் அபாரமான வெற்றி கிடைத்துள்ளதால், கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அதுபோல் குயின்ஸ் ரோட்டில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும், நடனமாடியும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story