2022-ல் ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு 14 மடங்கு அதிகரிப்பு


2022-ல் ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு 14 மடங்கு அதிகரிப்பு
x

ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் தினசரி கச்சா எண்ணெய் அளவு நவம்பரில் 14 மடங்காக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததை கண்டித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷியா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்தன. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததோடு, ரஷியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

அதே சமயம் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 130 டாலர் வரை அதிகரித்த சூழலில், இந்தியாவிற்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய ரஷியா முன்வந்தது. இதனால் ரஷியாவிடம் இந்தியா இறக்குமதி செய்யும் தினசரி கச்சா எண்ணெய் அளவு 14 மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்த தினசரி கச்சா எண்ணெய் அளவு 68 ஆயிரம் பேரல்களாக இருந்த நிலையில், நவம்பரில் 9.59 லட்சம் பேரல்களாக அதிகரித்தது. ரஷிய கச்சா எண்ணெய்க்கு விலை உச்சவரம்பு பேரலுக்கு 60 டாலர் வரை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வந்த கச்சா எண்ணெய் அளவு இந்த ஆண்டு கணிசமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story