மகள் இறந்த அதிர்ச்சியில் தாய் மரணம்


மகள் இறந்த அதிர்ச்சியில் தாய் மரணம்
x
தினத்தந்தி 22 Jun 2023 9:45 PM GMT (Updated: 23 Jun 2023 8:51 AM GMT)

ஹாசனில் வாடகைதாரர் கொடுத்த தொல்லையால் வீட்டின் உரிமையாளர் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி அறிந்து பெண்ணின், தாய் அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்.

ஹாசன்:

ஹாசனில் வாடகைதாரர் கொடுத்த தொல்லையால் வீட்டின் உரிமையாளர் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி அறிந்து பெண்ணின், தாய் அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்.

வாடகை தாரருடன் தகராறு

ஹாசன் டவுன் தாசரகொப்பலு பகுதியை சேர்ந்தவர் லலிதா (வயது 55). இவரது கணவன் நட்ராஜ். இவர்களுக்கு தாசரகொப்பலு பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீ்ட்டின் கீழ் தளத்தில் லலிதா கணவனுடன் வசித்து வந்தார். மேல் தளத்தை வாடகைக்கு விட்டிருந்தனர். அங்கு அதே பகுதியை சேர்ந்த சுதாராணி என்பவர் வசித்து வந்தார். ரூ.5 லட்சம் கொடுத்து ஒப்பந்த அடிப்படையில் சுதாராணி வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக லலிதா, சுதாராணியிடம் வீட்டை காலி செய்யும்படிகூறியதாக தெரியவந்தது. இதற்கு சுதாராணி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து கோபமடைந்த லலிதா, சுதாராணியிடம் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து கடந்த 16-ந் தேதி ஏற்பட்ட தகராறில் லலிதா, நட்ராஜ் சேர்ந்து சுதாராணியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சுதாராணி தம்பதி மீது ஹாசன் புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதாவது தம்பதி எனது வீட்டில் நகைகளை திருடியதாக கூறியிருந்தார். இந்த புகாரை ஏற்ற போலீசார் லலிதாவிடம், விசாரித்ததாக கூறப்படுகிறது.

விஷம் குடித்து தற்கொலை

இதனால் மிகவும் மனம் நொந்து காணப்பட்ட லலிதா மறுநாள் 17-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், பண்ணை தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் லலிதாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் 2 தினங்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து ஹாசன் புறநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த செய்தி அறிந்த லலிதாவின், தாய் லட்சும்மா நேற்று அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் வீட்டில் வாடகைக்கு இருந்தவர் கொடுத்த தொந்தரவால் லலிதா, லட்சும்மா இறந்ததாக நட்ராஜ் ஹாசன்புறநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story